Sunday, May 29, 2011

Arupathile Enakku Tha

நாடி தளர நரை தெரிய அறுபதின் நாற்சந்தியிலே 
ஓடி வந்த களைப்புடனே ஓர் நிமிடம் ஒதுங்குகிறேன்;
ஓடிவிட்ட வாழ்விதனில் நாற்ச்சந்தி எத்துனைதான் ! 
கோடி புண்ணியம் - நல் வழி தான் இனி காட்டிடையா :

வந்த சுவட்டினிலே திரும்ப ஓர் வழியில்லை ,
எந்த திசை ஐயா இனி நான் செல்வதற்கு !
வந்தனை செய்யவோ அன்றி என் உடல் வாட 
உந்தன் சந்நிதியில் விரதங்கள் காக்கவோ !

உற்ற மனைவி தன உறுதுணையை வாக்களிக்க 
பெற்ற மகளவள் பேதையாய் நின்றழைக்க 
மற்றவரெலாம் என் தேவை அறிந்தழைக்க
'வெற்று நானு'ம் இனி அவ்வழியே செல்வேனோ :

நோயுற்ற மாந்தர் தம் வேதனையைத் தீர்த்திடவே 
பேயாய் அலைந்து நன்நேரமெல்லாம் மருந்தாற்றி
ஓயாமல், ஒரு  கணமும் உந்தனையே நினையாமல் 
போய்விடவா- இவ்வூன் தான் போய் சேரும் வரை !

ஊரும் சதமல்ல உறவும் நிஜமல்ல 
பேரும், பெரும்பணமும், புகழ் வாழ்வும் 
நாருமிவ் வுடலும் வேளைதான் வந்திட்டால்
சேருமிடமறியேன்- அறிந்தும் அறிவிலனே .

'ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்ட' நா நின் 
நாமம் முழங்கி நன்ஞானம் எய்திட்டே 
காமக்ரோதாதி கடு விலங்கருத்திட்டு
சாமம் முடிந்து விடிவெள்ளி காண்பேனோ-

அலைகடல் நீ, நான் அலை, சேர வழி காட்டு
நிலையிலா வாழ்வறுத்து நின் பதம் துணை கூட்டு 
தளையகன்று ஆன்ம நான் பரமான்மாவென்றுரை
தலைமகனே, நல்வழியை அறுபதிலே எனக்குத் தா.
  
           

No comments:

Post a Comment