மது மயங்கி மதி இழந்த மன்னவனின் மாளிகையுள்
எது போகும் : எல்லாமும் - நாய், பேயும், பொய் புரட்டும்
சதிராடும் விலைமகளும்! வீணென்று விரட்டாமல்
மதி இழந்த மன்னவனே எதிர் கொண்டு விழைவானே.
நிம்மதியும் நிதர்சனமும் அமைதியுமாங்கழகுமில்லை
துன்மதியின் படபடப்பொடு ஆடம்பரமாரவாரம்
இன்னும் பல நிறைந்தபின் வருவதெது- அழிவேதான்
மன்னவனோ நானே நான்- மாளிகையோ உடலேதான்!
சரியிலையே சிற்றின்பம்- சிலநாளோ , சிலகணமோ:
பொறிவாயில் பொறிவைத்து, தீதெதையும் தீ வைத்து
அறிவாற்றலால் 'அழிவு' அதையும், ஆரவாரப் பேய்களையும்
பிரிவாற்றிப் போகவிட்டு , பெறுவோமே பேரின்பம்.
அகங்கார மாணவத்தை ஆற்றோடு போகவிட்டு
பகவானின் பதம் பற்றி மமகாரம் ஒழித்திட்டால்
அகத்தினிலே அமைதியேதான் அதன் பின்னே சுகமே தான்
சுகமதுவே நிலையன்றோ- தெளிந்த பின்னே தேவைஎதோ !
சுவையூறும் நற்பண்டம், மிடுக்குடை நல்லாடை -
இடை நோகா மென் மெத்தை, நற் துணையும் மாளிகையும்
இவை யாவும் மெய்தனுக்கே- சுகமதுவும் நிலையல்லவே!
மறைபொருளே! மெய்ப்பொருளே! நானிந்த உடலல்லவோ௧
கண்மறைக்கும் கடுங்கோபம், மதி மயக்கும் மகிழ்வுணர்வு:
எண்ணங்கள் வீணானால் வறுமை நிறை தனியுணர்வு ;
எண்ணிலா எவ்வுணர்வுகளே நிறைவதனைத் தரவிலையே-
'நான்' என்ன அறிகிலனே- உணர்வெல்லாம் மனத்தளவோ!
உடலிதுவும் நானல்ல; அண்டம்படை அகப்பொருளே-
கடலாழம் மிக்குற்ற மனமதுவும் 'நா'நன்றென
விடை தந்தது என் மதியே! முன்னவனே விபரீதம்:
விடை மதியும் 'என்' மதியே- பின்-மதியுமல்ல 'நான்' என்றால்-
நானாரென நானறியேன் - கண் கட்டும் வித்தைஎனோ!
'நா'நெனக்கே தெரிந்திலனே-பின் தேவையென ஏதுரைப்பேன்!
நானதையே நானுணர நாளெல்லாம் கழியட்டும் -
நீஎனக்கு இதில் மட்டும் பரம் பொருளே துணை இறையா!